‘நாளை மற்றுமொரு நாளே’ மாதிரியான களம் கொண்ட நாவல் – ‘ஒரு மாதிரியான’ என்று ஒதுக்கக்கூடிய காலத்தில் – 1960களில் எழுதப்பட்ட நாவல். சமுதாயத்திற்கு பயந்து யாவரும் ஒதுக்கும் ஏரியா, ஆனால் கள்ளத்தனமாக ஒதுங்க விரும்புவது இந்த ‘குறத்தி முடுக்கு’. அதனால்தான் ஜி.நாகராஜன், ‘இதையெல்லாம் எழுதவேண்டுமா என்று கேட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள்; வேண்டுமானால் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று முதலிலேயே, யோக்கியமாக நடிக்காதீர்கள் என்று கூறிவிடுகிறார்.

17848055

கதையின் crux இதுதான் – ஊரின் மத்தியில் ஒரு சின்ன ரெட் லைட் தெரு; அங்கு ரெகுலராக வரும் ஒரு பத்திரிகையாளன் (The man with no name) தங்கம் என்ற விலைமாதுவை காதலிக்க தொடங்குகிறான். அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவள் முதலில் மழுப்பிவிடுகிறாள். அடுத்த மூன்று தினங்களில் அவள் ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள். வெறுத்துப் போன அவன் அந்த ஊரில் இறுக்கப் பிடிக்காமல் மதுரைக்கு மாற்றலாகி போகிறான். பின்பு ஒரு நாள் வேலை விஷயமாக திருவனந்தபுரத்திற்கு செல்லும் போது அவளைப் பார்க்கிறான். அவள் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். தான் யாரோடு வசிக்கிறேன் என்பதைப் பற்றி அவள் சொல்வதை முழுவதும் கேட்டபின் அவன் அறைக்கு சென்று அவள் நினைவில் மூழ்கித் திளைக்கிறான்.

இந்தக் கதையை இன்றைய நாள் வரை ‘classic’ என்ற நிலையில் இருப்பதற்கு காரணம், ஜி.என். எடுத்துக் கொண்ட களமும், அந்தக் கால சூழலில் நடந்த சம்பவங்களின் விளைவுகள், அதன் தாக்கம் என்று கதையை நகர்த்தியிருப்பதும் ஒரு காரணம். கதை சொல்லி, தான் சொல்ல வந்ததை வாசகனிடம் சேர்ப்பது ஒரு முறை என்றால், தான் உணர்ந்ததை படிக்கும் வாசகனையும் உணரவைப்பது ஒரு வெற்றிகரமான முறை. அது எளிதும் அல்ல…அந்த வகையில் ஜி.என். எப்போதும் போல ஆடம்பர வார்த்தைஜாலங்களில்லாமல் கதையை நகர்த்தி வாசகனை குறத்தி முடுக்கில் கொஞ்ச நேரம் அலையவிட்டு விடுகிறார்.

கதையின் core சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்ட ஆனால் ஆண்கள் தங்கள் மனஅழுக்கை கள்ளத்தனமாக களைவதற்கு பயன்படுத்தும் இடத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இந்தக் கதையில் மையமாக வரும் பத்திரிக்கையாளனும் தங்கமும் தவிர குறத்தி முடுக்கில் இருக்கும் கர்ப்பிணியான செண்பகம் ஒரு முரடனுடன் செய்யும் கலவியால்  கலையும் கர்ப்பம், மரகதம் என்ற விலைமாதுவுக்கு  ஒரு ஊதாரியான இளைஞனுடன் உருவாகும் காதல், தொழில் முறை அத்தான்கள், இறுதியில் வரும் பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி தற்கொலைக்கு முயல்வதும், அதற்கிடையில் தவிர்க்கமுடியாமல் ஒரு கஸ்டமருடன் படுப்பதும், அதன்பின்பு மீண்டுமொருமுறை  தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போகும் அவலம், போலீஸ் பிடித்துச் சென்று முடியை மழித்துவிட்ட பிறகு மனநிலை பாதிக்கப்படும் மீனாட்சி என்ற ஒவ்வொரு எபிசோடும் non-linearஆக அந்தக்காலத்திலேயே உருவாக்கி இருக்கிறார்.

சுதந்திரம் அடைந்தப் பின்  மக்கள் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தக் காலம். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் அவர்கள் சுயநலத்துடனே தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தவிர எதைப் பற்றியும் சிந்திக்கமறந்து வாழ்ந்திருக்கிறார்கள். இதை ஜி.என். நக்கலாக…’நண்பன் ஒருவனுக்கு இரவலாக கொடுத்திருந்த ‘பாரதி பாடல்களை’க் கூடத் திரும்ப கேட்க மறந்துவிட்டேன்‘ என்கிறார். இன்னொரு இடத்தில், தன்னுடைய பத்திரிகை ஆசிரியர், மக்களுக்கு என்னத் தெரியுமோ அதை மட்டும் சொன்னால் போதும் என்பதை, “கிரிக்கெட் பற்றி என்னவென்று தெரியாத நாட்டில் எந்த டெஸ்ட் பந்தயத்துக்கு யார் நடுவர் என்ற செய்தியை தெரிவிக்க என்ன அவசியம்? புற்றுநோய் அறியாத நாட்டில், அந்நோயை அறிந்திருந்தாலும் அதன் நிவாரணத்தைப் பற்றிக் கவலைப்படாத நாட்டில் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சைமுறை கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்?” என்று கேட்கிறார்.

திருமணம் பற்றி ஜி.என். சொல்வது இன்றைய சூழலுக்கும் பொருந்தும் – காமத்தின் வடிகாலுக்காகவும் குழந்தை வளர்ப்பு என்ற தொல்லைக்காகவும் தான் திருமணம் – இதை புரிந்துகொள்ளாது காதலுக்கு மணவாழ்க்கையின் அனுகூலங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு அர்த்தத்தைக் கற்பிப்பது என்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயம்.

தங்கம் தான் கூட்டிவைத்திருக்கும் வீட்டுக்காரனின் குடும்பம் சீரழிந்ததிற்கு தானே காரணம் என்றவள் கூறியதை, “வீட்டுக்காரன் உடம்பு சுகமில்லாமல் படுத்திருக்கிறான். அடுக்களையில் கலவரம். மனைவியும் சகலதையும் ஒருத்தி முடியை ஒருத்தி பிடித்துக்கொண்டு மல்லுக்கட்டி நிற்கின்றனர். அவன் தள்ளாடி நடந்து வருகிறான். வெறிகொண்டவனைப்போல் விறகுகட்டையை எடுத்து பெண்சாதியையும் பிள்ளைகளையும் போடு போடு என்று போடுகிறான். கொள்ளிக்கட்டை சுட்டு தங்கம் அலறிக்கொண்டிருக்கிறாள்… வாழ்க்கைக்குத்தான் எவ்வளவு அழகான பொருள்! கடவுள்தான் எவ்வளவு பெருமைப்படுவார்” – என்று எண்ணிப் பார்ப்பதை ஜி.என். நகைமுரணாக சொல்கிறார்.

ஜி.என்.னின் மிகப் பிரபலமான quote – ‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்‘ என்பது. சமுதாயம் எப்போதுமே போலி மனிதர்களால் உருவாக்கப்பட்டது; போலியான உணர்வுகளாலும் குணாதியங்களாலும் நிரப்பப்பட்ட மனிதர்கள் அலையும் உலகமிது. இங்கே அடிமனதில் அருவருக்கத்தக்க எண்ணங்களை வைத்துக் கொண்டு வெளிவேஷத்தோடு அலைபவர்கள். ஜி.என். இந்த மாதிரி மனிதர்களை ஒதுக்கி விட்டு, யதார்த்த மனிதர்கள் உலவும் இருள் சூழ்ந்த உலகையே தேர்ந்தெடுப்பார். ஏனென்றால், இந்த மனிதர்கள் இருளில் இருப்பதே  வெளிச்சத்தில் இருக்கும் போலி மனிதர்களால் தான். அப்படித்தான், இந்த குறத்தி முடுக்கில் இருக்கும் மனிதர்கள் யதார்த்த மனிதர்களே; வெளிவேஷமற்ற அவர்களிடம் உண்மை மட்டுமே உண்டு. அந்த உண்மையைத் தான் ஜி.என். தன் எழுத்தில் யதார்த்தமாக கொண்டு வந்திருக்கிறார்.

3 thoughts on “குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்

Leave a comment